மழையும் மப்பும் மந்தாரமுமாக இருக்கும் நாட்களில் வயிற்றிலும் மப்பும் மந்தாரமும் சூழ்ந்து நிற்கும். வயிற்றிலுள்ள கதகதப்பினால் சிறுநீரகங்களின் உற்பத்திக் கேந்திரங்கள் கட்டுப்பாட்டுடன் இயங்குகின்றன. இந்தக் கதகதப்பு மந்தப்படுவதால், சிறுநீரின் உற்பத்தியானது சிறுநீரகங்களில் அதிகரித்து அடிக்கடி வெளியேறுகிறது. அதனால் வயிற்றிலுள்ள மப்பும் மந்தாரமும் மாறி அதன் சுறுசுறுப்புக்கும் சூடான நிலையைப் பெறுவதற்கும் தக்க உதவி தேவை. தீபாவளி லேகியத்தை இந்தக் காலகட்டங்களில் நம் முன்னோர் தயாரித்து தினம் காலையில் சாப்பிட்டு வயிற்றின் மந்த நிலையைப் போக்கி சிறுநீரின் அதிக அளவிலான போக்கைக் கட்டுப்படுத்தினர். நீங்களும் தீபாவளி லேகியத்தை எளிதாக வீட்டிலேயே தயாரித்துச் சாப்பிடலாம். இதற்குத் தேவையானவை:
திப்பிலி 50 கிராம், ஓமம் 50 கிராம், கண்டந்திப்பிலி 50 கிராம், ஏலக்காய் 5 கிராம், ஜாதிக்காய் 5 கிராம், சுக்கு 25 கிராம், மிளகு 25 கிராம்,சீரகம் 25 கிராம், கொத்துமல்லி 25 கிராம்.
ஜாதிக்காய், ஏலக்காய் நீங்கலாக மற்றவற்றை வறுத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் நன்கு இடித்துச் சூரணமாக்கிக் கொள்ளவும். வெல்லம் 300 கிராம் அளவு தண்ணீரில் கரைத்துப் பாகாக்கி அதில் 50 கிராம் நெய் விட்டு இந்தச் சூரணத்தைப் போட்டுக் கிளறி வைத்துக் கொள்ளவும். சுமார் 1 -2 டீ ஸ்பூன் அளவு காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும்.
மார்கழியும் தையும் ஹேமந்த ருதுவெனப்படும். இவ்விரு மாதங்களில் பனி அதிகமாக உணரப்படும். பொதுவாகவே இக்காலத்தில் இரவு நேரம் அதிகம். பகல் நேரம் குறைவு. பகலிலும் பனி வாடை காலை 8-9 மணி வரையிலும் இருக்கும். மாலை 5 மணியிலிருந்தே பனி வாடை ஏற்பட்டுவிடும். ஆகவே அதிலிருந்து உடலைக் காப்பாற்றும் கம்பளி முதலிய உடைகளின் கதகதப்பு, தோலின் வறட்சி ஆகியவற்றின் காரணமாக ஜீரண கோசங்களுக்குத் தேவையான சூடு சற்று அதிகமாகவே இருக்கும். உணவைச் செரிக்க வைக்க வேண்டிய செயல் சிறுநீரகங்களுக்கு இல்லாததாலும், சூடு வயிற்றுப் பகுதியில் குவிந்திருப்பதாலும், சிறுநீரகங்கள் வெளியிலுள்ள பனி வாடையால் குளிர்ந்திருக்கும். இந்தக் குளிர்ச்சியின் தாக்கத்தினால், நீர்ச்சுரப்பு அப்பகுதியில் கூடுகிறது. இதுவே சிறுநீர்ப் பெருக்கு ஏற்படுவதற்குக் காரணமாகிறது. இந்தக் காலத்தையொட்டி ஜீரண உறுப்புகளின் நிலைக்கேற்ப அமைந்த உத்தம உணவு பொங்கல். அதன் செரிமானத்தில் , உடல் உட்புற சூட்டைத் தளர்த்தி, எல்லாப் பகுதிகளுக்கும் சீராகப் பரப்புவதால், சிறுநீரகங்களுக்குத் தேவையான சூடு கிடைப்பதால், அதன் செயல்பாடு சீராகி, நீர்ச்சுரப்பைக் கட்டுப்படுத்தும், விடியற்காலையிலேயே எழுந்து வெந்நீரில் குளித்து காய்ந்த உடை உடுத்தி வெளிக் குளிரைப் போக்கிக் கொள்வதன் மூலமாகவும், சிறுநீர் அதிக அளவில் போவதைத் தடுத்துக் கொள்ளலாம். ஐந்து உரைப்புள்ள பொருட்களாகிய திப்பிலி, கண்டந் திப்பிலி, செவ்வியம், கொடி வேலி வேர்ப்பட்டை, சுக்கு எனும் பஞ்சகோலம் சேரும் இந்த காந்தம் கஷாயத்தைக் காலை, மாலை குடித்து வருவது மிகவும் நல்லது. 15 மி.லி. கஷாயத்தை 60 மி.லி. வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து காலை, மாலை
உணவுக்கு 1 மணி நேரம் முன்பாகச் சாப்பிடவும்.
எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை