பி.எஸ்.எம். ராவ் (Dinamani-19/5/2011)First Published : 19 May 2011 03:49:00 AM IST
விவசாயக் கடன்கள் வழங்குவதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டிவிடுவதாக மத்திய அரசு மார்தட்டிக் கொண்டிருக்கிறது. 2004-ம் ஆண்டில் இருந்து ஒவ்வோராண்டும் இந்த இலக்குகள் அதிகரித்துக்கொண்டே வந்திருக்கின்றன. ஆனாலும் அந்த இலக்குகள் தவறவிடப்படவில்லை. 2011-12-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.4.75 லட்சம் கோடி விவசாயக் கடன்களை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதையும் அரசு நிறைவேற்றிவிடும் என்பதில் சந்தேகமேயில்லை.
அடுத்த பட்ஜெட் உரையில் இன்னும் கூடுதலாக இலக்கு நிர்ணயிக்கப்படும் என்பதும் எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான். பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டப்படும் ஓர் அரசு, இப்படி விவசாயிகளுக்குக் கடன்களை அள்ளி வழங்குகிறதே, அப்படியானால் நாட்டில் விவசாயிகள் அனைவருக்கும் கடன்கள் கிடைக்கின்றனவா? எல்லோரும் சுபீட்சமாக இருக்கிறார்களா? அதுதான் இல்லை.
அரசு கூறிக்கொண்டிருக்கும் புள்ளிவிவரங்கள் எதுவும் நடைமுறையில் வெளிப்படவில்லை. பெரும்பான்மையான விவசாயிகள் இன்னமும் முறையான கடன் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வங்கிகள் போன்ற அமைப்புகளிடமிருந்து கடன்கள் கிடைக்காததால், தனியாரிடம் அநியாய வட்டிக்குக் கடன்களை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இதில் சிறு மற்றும் குறு விவசாயிகள்தான் அதிகம்.
அரசு வழங்கும் விவசாயக் கடன்கள் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முறையாகச் சென்றடையவில்லை என்று எத்தனையோ ஆய்வுகள் தெள்ளத் தெளிவாகக் கூறியிருக்கின்றன.
சிறு விவசாயிகளில் 87 சதவீதம் பேருக்கும், குறு விவசாயிகளில் 70 சதவீதம் பேருக்கும் அமைப்பு சார்ந்த கடன்கள் கிடைக்கவில்லை என்று உலக வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வளவு ஏன், ஒட்டுமொத்தமாகவே விவசாயிகளில் 51 சதவீதம் பேருக்கு எந்தவிதமான வங்கிச் சேவைகளும் கிடைக்கவில்லையாம்.
நாட்டில் மொத்தமுள்ள 8.93 கோடி விவசாயக் குடும்பங்களில் 4.59 கோடி (51.4 சதவீதம்) குடும்பங்களுக்கு வங்கிக் கடன்களும், தனியார் கடன்களும் கிடைக்கவில்லை என நிதி வகையில் அனைவரையும் உள்ளடக்குவது தொடர்பாக அமைக்கப்பட்ட ரங்கராஜன் கமிட்டி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கிராமம் கிராமமாக வங்கிக் கிளைகள் திறக்கப்பட்டு வரும் நிலையிலும், வெறும் 27 சதவீத விவசாயக் குடும்பங்களுக்கு மட்டுமே வங்கிகள் மூலமாகக் கடன்கள் கிடைக்கின்றன. அதில் மூன்றில் ஒரு பங்கினர் வங்கிக் கடன்களுடன் தனியாரிடமும் கடன் வாங்கித் துன்பப்படுகிறார்கள்.
விவசாயக் கடன்கள் தொடர்பாக மத்திய வேளாண் அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட சாரங்கி கமிட்டி, தனது ஆய்வறிக்கையை கடந்த ஆண்டு ஜூன் மாதம் சமர்ப்பித்தது. குறு விவசாயிகளில் வெறும் 14 சதவீதம் பேருக்கு மட்டுமே வங்கிக் கடன்கள் கிடைக்கின்றன என்று அந்த அறிக்கை மதிப்பிட்டுள்ளது. விவசாயக் கடன்கள் வழங்கப்படுவதன் வளர்ச்சி 22.9 சதவீதத்தில் இருந்து 10.6 சதவீதமாகக் குறைந்திருப்பதாக அண்மையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது.
அரசு கூறுவதைப்போல விவசாயக் கடன்கள் எல்லோருக்கும் போய்ச் சேர்ந்துவிடவில்லை என்பதற்கும், விவசாயிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதற்கும் இவையெல்லாம்தான் ஆதாரங்கள்.
பெரும்பான்மையான விவசாயிகளுக்கு முறையான வங்கிக் கடன்கள் கிடைப்பதில்லை என்பது உறுதியாகியிருக்கிறது. அதாவது, 24 சதவீதம் முதல் 64 சதவீதம் வரை வட்டி வசூலிக்கும் தனியாரிடம் கடன் வாங்கிப் பயிர் செய்வதைத்தான் இவர்கள் நம்பியிருக்கிறார்கள். பின்தங்கிய கிராமப்புறங்களில்தான் வட்டிவிகிதம் கூடுதலாக இருக்கிறது. இதனால் பணக்கார விவசாயிகளைவிட ஏழை விவசாயிகள்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். தனியார் கூடுதலாக வட்டி வசூலிக்கிறார்கள் என்பதால், அமைப்பு சார்ந்த கடன்கள் நியாயமான வட்டியில் கிடைக்கின்றன என்று அர்த்தமில்லை.
ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் வங்கிகள் போன்ற அமைப்பு சார்ந்த கடன்களுக்கேகூட வெவ்வேறு வகையான வட்டி விகிதங்கள் வசூலிக்கப்படுகின்றன என்பது தெரியவந்திருக்கிறது.
7 முதல் 16 சதவீத வட்டியுடன் ஆய்வுக் கட்டணம், தவணைக் கட்டணம், சேவைக் கட்டணம், கடன் பரிசீலனைக்கான கட்டணம் எனப் பல்வேறு வகையில் விவசாயிகளிடமிருந்து பணம் பறிக்கப்படுகிறது. இதுபோக, பயிர்க்காப்பீடு பெற வேண்டும் என்கிற நிபந்தனை. அதற்கும் அதிகபட்சமான பிரீமியம் செலுத்தியாக வேண்டும்.
இவை எல்லாம் முடிந்தபிறகும் லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்கிற நிலைமை. இத்தனை கஷ்டப்பட்டு வங்கிகளில் கடன் வாங்குவதைவிடத் தனியாரிடமே கடன் வாங்கிவிடலாம் என்கிற எண்ணமே விவசாயிகளிடம் மேலோங்கி விடுகிறது.
உண்மையில், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைத் தாண்டியும் வங்கிக் கடன்கள் வழங்கப்படுகின்றன என்று அரசு தரும் புள்ளிவிவரங்களே தவறானவைதான். நாட்டில் 72 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசிக்கிறார்கள் என்பதும், அவர்களது முக்கியத் தொழில் விவசாயம் என்பதும் அரசே தரும் புள்ளிவிவரங்கள். ஆனாலும், வங்கிகள் வழங்கும் ஒட்டுமொத்தக் கடன்களில் விவசாயக் கடன்களின் விகிதம் ஒவ்வோராண்டும் குறைந்து கொண்டேதான் வந்திருக்கிறது. மொத்தக் கடனில் 18 சதவீதம் அளவுக்கு விவசாயத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்கிற விதியும் காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கிறது.
கடந்த 2003 முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலத்தில் அரசுத்துறை வங்கிகள் வழங்கிய மொத்தக் கடனில் சராசரியாக 14.5 சதவீதம் முதல் 17.2 சதவீதம் மட்டும் வேளாண்துறைக்கு வழங்கப்பட்டிருக்கிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தனியார் வங்கிகள் 10.9 முதல் 15.9 சதவீதம் வரையே விவசாயத்துக்கு கடன் வழங்கியிருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், வேளாண் துறையில், சிறு மற்றும் குறு விவசாயிகளின் விகிதத்துக்கு ஏற்ப அவர்களுக்கு வங்கிக் கடன் சென்றடையவில்லை என்பதுதான்.
2006-2007-ம் ஆண்டில் வங்கிகள் வழங்கிய மொத்தக் கடன் மதிப்பில் வெறும் 27 சதவீதம் மட்டுமே 1 முதல் 2 ஹெக்டேர் நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகளுக்குக் கிடைத்திருக்கிறது. குறு விவசாயிகளுக்கு 26.67 சதவீதம் கடன் கிடைத்திருக்கிறது.
இதில் அதிர்ச்சியளிக்கும் அம்சம் என்னவென்றால், விவசாயிகள் மற்றும் பின்தங்கிய மக்களின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே தொடங்கப்பட்ட சில கூட்டுறவு வங்கிகள் போன்ற அமைப்புகள் பலவும் தங்களது நோக்கத்திலிருந்து விலகிச்சென்று கொண்டிருக்கின்றன என்பதுதான்.
கடன் விநியோகத்தை வலுப்படுத்த வேண்டும், நிதி வகையில் அனைவரையும் உள்ளடக்க வேண்டும் என்று அரசு ஏதேதோ பேசிக்கொண்டிருக்கும் வேளையில், இந்த அமைப்புகள் சத்தமேயில்லாமல் வேளாண் கடன்களைக் குறைத்து வருகின்றன. கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 1992-93-ம் நிதியாண்டில் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த கடன்களில் விவசாயிகளுக்கு மட்டும் 62 சதவீதக் கடன்கள் வழங்கப்பட்டன. இதுவே 2009-10-ம் நிதியாண்டில் வெறும் 15.67 சதவீதமாகக் குறைந்திருக்கிறது.
கூட்டுறவு வங்கிகளும் நாடு முழுவதும் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் கிளைகளும் சேர்ந்து வேளாண்மையைச் சுபீட்சமாக்கியிருக்க வேண்டும். ஆனால், விவசாயக் கடன்களை அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொண்டே வந்திருக்கிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை.
ஒரு பக்கம் கூட்டுறவு வங்கிகள் தங்களது லாபத்தை இழந்து நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கிராமப்புறங்கள் பக்கமே போக விரும்பாத வர்த்தக வங்கிகள் எல்லாப் பகுதிகளிலும் கடைவிரித்து லாபத்தை அள்ளிக்கொண்டிருக்கின்றன.
எல்லாம் வணிகமயமாகிவிட்டதால், 60 சதவீதம் பேருக்கு வேலையும், நாடு முழுமைக்கும் உணவும் தரும் ஒரு துறைக்கு கடன் வழங்குவதை யாருமே விரும்பவில்லை என்பதும்தான் உண்மை.
இதுபோலவே கிராமப்புறங்களில் வசிக்கும் பின்தங்கிய மக்களுக்காகக் கடன்கள் வழங்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட பிராந்திய ஊரக வங்கிகளும் 1992-93-ல் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமலான பிறகு தங்களது பாதைகளை மாற்றிக் கொண்டுவிட்டன. பின்தங்கிய மக்களுக்குக் கடன்கள் வழங்குவதைக் குறைத்துக் கொண்டன.
நூறுசதவீதம் பின்தங்கிய மக்களுக்கு மட்டுமே கடன்கள் வழங்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த அமைப்புகள் இப்போது 10 சதவீதம் கடன்களை மட்டும் பின்தங்கிய மக்களுக்கு ஒதுக்குவது என முடிவு செய்துவிட்டன.
கிராமப்புற மக்களுக்குச் சேவை செய்ய வேண்டிய இந்த வங்கிகள் நகர்ப்புறங்களில் கிளைகளை விரிவுபடுத்துவதிலேயே தொடர்ந்து மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இப்படி மற்ற வர்த்தக வங்கிகளைப்போலவே லாப நோக்குடன் செயல்படுவதற்கு, பிராந்திய ஊரக வங்கிகள் தேவையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இன்னொரு பக்கம் வர்த்தக நோக்குடன் செயல்படும் வங்கிகள், ஏற்கெனவே கிராமப்புறங்களில் செயல்பட்டு வந்த தங்களது கிளைகளை ஒவ்வொன்றாக மூடிக்கொண்டிருக்கின்றன. ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களில் இது தெளிவாகத் தெரிகிறது.
வேளாண்மையில் அரசு முதலீடு குறைப்பு, இடுபொருள்களின் விலை உயர்வு, விளை பொருள்களுக்கு லாபமில்லாத விலை உள்ளிட்டவைதான் விவசாயத்துறையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்குக் காரணம் என்பதை பல்வேறு ஆய்வுகளும் உறுதி செய்திருக்கின்றன.
தனியாரிடம் அதிக வட்டிக்குக் கடன் வாங்கியதே விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணம் என்பதையும் நாம் அறிவோம். வங்கிகள் போன்ற அமைப்பு சார்ந்த கடன்கள் வழங்கும் முறை தோல்வியடைந்துவிட்டதையே இவை காட்டுகின்றன.
புதிய பொருளாதாரக் கொள்கை அமலான பிறகு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை ஒவ்வோர் அரசும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், உண்மையில் அரசின் நடவடிக்கைகளும் தேர்ந்தெடுத்திருக்கும் பாதையும் தேவையற்றவர்களை, ஏழைகளைப் புறக்கணிக்கும் வளர்ச்சியை நோக்கியே அமைந்திருக்கின்றன.
நாட்டுக்கே உணவளிக்கும் சமூகம் வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறது. சிறு மற்றும் குறு விவசாயிகள் கடன்கள் கிடைக்காமலும், லாபம் இல்லாமலும் துன்பப்பட்டு வருகின்றனர். எல்லாவற்றையும் மறைத்துவிட்டு, விவசாயத்துக்கு அதிகக் கடன்கள் வழங்கப்படுவதாக அரசு கூறிக் கொண்டிருக்கிறது. கடன் இலக்குகள் எட்டப்பட்டுவிட்டதால் மட்டுமே விவசாயம் விருத்தியடைந்துவிடாது.
தோல்விகளை ஒப்புக்கொண்டு உண்மையான அக்கறையுடன் திட்டங்களை வகுப்பதற்கு ஆட்சியாளர்கள் முன்வந்தால் மட்டுமே விவசாயிகளையும் விவசாயத்தையும் பாதுகாக்க முடியும். அதுதான் அரசு கூறிக்கொண்டிருக்கும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு வழி.

No comments:
Post a Comment