our inspiration

Saturday, January 19, 2013

மாடே இல்லாமல் பால் உற்பத்தி!



By கே.என். ராமசந்திரன்
First Published : 19 January 2013 01:34 AM IST



தன்னால் முடியாத ஒரு காரியத்தைச் செய்துதரச் சொல்லி நச்சரிக்கிறவனைப் பார்த்து, ""காளை மாடு, காளை மாடு என்கிறேன், உழக்குப்பால், உழக்குப்பால் என்று கழுத்தறுக்கிறாயே'' என்று சீறுவார்கள். ஆனால், மாடே இல்லாமல் பாலை உற்பத்தி செய்கிற வித்தை சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் கைவந்த கலையாகிவிட்டது.



2008-ஆம் ஆண்டில் சீனா மேலைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பால் மற்றும் குழந்தை உணவான பால் பொருள்களில் வேதிப்பொருள்கள் அதிக அளவில் கலந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு அது, ""மாபெரும் பால் ஊழல்'' என்று பிரபலமானது.

 ஏராளமான குழந்தைகள் உள்பட பலர் நோய்வாய்ப்பட்டதால் மேலை நாடுகள் சீனத்திலிருந்து பால் பொருள்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்தன.

 சீனா ஏற்றுமதிசெய்த பால் மற்றும் பால் உணவுகளில் "மேலமைன்' என்ற தொழிலியல் வேதி கலக்கப்பட்டிருந்தது. தீப்பிடிக்காத கூரை மற்றும் தடுப்புகளைத் தயாரிக்க உதவும் "மேலமைன் பார்மால்டிஹைடு' என்ற பிளாஸ்டிக் ரோசனத்தை உற்பத்தி செய்யத் தேவையான கச்சாப்பொருள் "மேலமைன்'. அதைப் பாலுடன் கலந்துவிட்டால் கூடுதலான புரதச்சத்து இருப்பதைப்போல முதல் கட்டச் சோதனைகளில் காட்டும். ஆனால், "மேலமைன்', சிறுநீரகத்திலும் சிறுநீர் உறுப்புகளிலும் சேதமேற்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டதும் அதை உணவுப் பொருள்களில் சேர்ப்பது உலகளாவிய அளவில் தடை செய்யப்பட்டுவிட்டது.

 சீனாவின் பால் ஊழல், 2008 ஜூலையில் வெளிச்சத்துக்கு வந்தது. அடுத்த நவம்பருக்குள் மூன்று லட்சம் பேர் "மேலமைன்' ஏற்படுத்திய கோளாறுகளால் பாதிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டது. சிறுநீரகத்தில் கல் உருவாவது முதலான பல்வேறு சிறுநீரகக் கோளாறுகள் காரணமாகக் குறைந்தது ஆறு குழந்தைகள் மரணமடைந்ததாகவும் தெரியவந்தது.

எப்படியாவது ஏற்றுமதியைப் பெருக்க வேண்டும் என்ற வெறியுடனிருக்கிற சீனத் தொழில்துறை தாம் பயன்படுத்துகிற வேதிப்பொருள்கள் உடலுக்கு ஊறு விளைவிக்கக்கூடும் என்பன போன்ற "அல்ப விஷயங்களுக்காக' அலட்டிக் கொள்வதில்லை!

நம் நாட்டுப் பால் உற்பத்தியாளர்களில் சிலர் உரத்தைப் போட்டு, தீவனம் வளர்த்து,  அதைப் பசு மாட்டுக்கு ஊட்டி அதன் பிறகு பாலைக் கறந்து விற்பது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்ற விஷயம் என்று எண்ணியோ என்னவோ - நேரடியாக - யூரியா, உரம், காஸ்டிக் சோடா, சமையல் எண்ணெய், சலவை சோப்புத்தூள், தண்ணீர் ஆகியவற்றுடன் கொஞ்சம் பாலையும் கலந்து செயற்கைப் பாலை நேரடியாகவே தயாரித்து விட்டார்கள். அது பார்ப்பதற்கு இயற்கையான பாலைப் போலவே நிறமும், செறிவும், கொழுப்பு உள்ளடக்கமும் கொண்டிருக்கும்.

   "பால்செறிவு மானி'யும் எளிதில் ஏமாந்துவிடும். உணவு ஆய்வகங்களில் முதல் நிலைச் சோதனைகளிலும்கூட அந்தச் "செயற்கைப் பால்' தேறிவிடும். ஆனால், அதைத் தொடர்ந்து பயன்படுத்துகிறவர்களுக்குப் பார்வைப்புலனும் செவிப்புலனும் பாதிக்கப்படுவதுடன் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புண்டு.

  சிறிதுகூட மனிதாபிமானமோ, பசு அபிமானமோ இல்லாமல் காசு மட்டுமே குறி  என்றிருக்கிற சில பால் உற்பத்தியாளர்களுக்கு "ஆக்சிடோசின்' என்ற வேதி கை கொடுக்கிறது. இயற்கையான ஆக்சிடோசின், விலங்குகளின் பிட்யூட்டரிச் சுரப்பியின் பின்பகுதியில் உற்பத்தியாகிச் சேமித்து வைக்கப்படுகிற ஒரு ஹார்மோன். அது பெண்களின் பிரசவத்திற்குப் பிறகு கருப்பையைச் சுருங்க வைப்பதற்கும் மார்பகத்திலிருந்து பாலை வெளிப்படச் செய்வதற்கும் உதவுகிறது. அந்த ஹார்மோன் செயற்கையாகவும் தயாரிக்கப்பட்டு விற்பனையாகிறது.

 பிரசவத்துக்குப் பின் கருப்பையில் சிக்கல் ஏற்பட்டால் அவசர கால சிகிச்சைக்கு மருத்துவர்கள் அதைப் பயன்படுத்துவார்கள். அதைக் கவனக் குறைவாகப் பயன்படுத்தினால் கருப்பை சேதப்பட்டுக் கிழிந்து கூடப் போகலாம்.

கால்நடைகளுக்குப் பயன்படுத்தப்படும் செயற்கை ஆக்சிடோசின் மிகவும் மலிவாக, ஒரு குமிழ் ஐம்பது பைசா விலையில் கிடைக்கிறது. பால் கறப்பதற்குச் சற்று முன் அதைப் பால் மடியில் ஊசி மூலம் செலுத்திவிட்டால் கூடுதலாகப் பால் கிடைக்கும் என்ற தவறான எண்ணம் பால்காரர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. ஆனால் உண்மையில் அது பால் காம்பிலுள்ள சுருக்குத் தசைகளைத் தளர்த்திவிட்டுப் பால் வேகமாக வெளிப்பட மட்டுமே செய்கிறது. அத்துடன் அது பசுவின் இனப்பெருக்க உறுப்புகளைச் சேதப்படுத்தவும் கூடும். பொன்  முட்டையிடும் வாத்தை அறுத்தவன் கதை மாதிரி, நிறையப் பால் கிடைப்பதைப் போலத் தோன்றினாலும் இரண்டு மூன்று ஆண்டுகளில் பசு பால் தருவது குறைந்து மலடாகவும் ஆகிவிடும். அதன் பிறகு அதைக் "கோ-சாலை'க்கோ (பசுப் பாதுகாப்பு இல்லம்), கசாப்புக் கடைக்கோ அனுப்ப வேண்டியதுதான்.

 "ஆக்சிடோசின்' செலுத்திக் கிடைத்த பாலைப் பருகும் மனிதர்களுக்கும் குறிப்பாகச் சிறு குழந்தைகளுக்கும் பலவிதமான உடலியல் கோளாறுகள் வரும். கருத்தரித்திருக்கும் தாய்மார்கள் அந்தப் பாலைப் பருகினால் பிரசவத்தின்போது கடுமையான உதிரப் போக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். அதில் தப்பிப் பிழைத்தாலும் குழந்தைக்குப் பாலூட்டுவதில் சிக்கல் ஏற்படலாம். பார்வைத் திறனும் கேட்கும் திறனும் பாதிக்கப்படுவதாயும் கண்டறியப்பட்டிருக்கிறது.

 மாடுகளுக்கு மட்டுமின்றிக் காய்கனி உற்பத்தியிலும் ஆக்சிடோசின் பயன்படுத்தப்படுகிறது. பறங்கி, பூசணி, சுரை போன்ற காய்களில் ஆக்சிடோசினை ஊசி மூலம் செலுத்தினால் அவற்றின் பருமன் ஓரிரு நாள்களிலேயே இருமடங்காக அதிகரித்து விடுகிறது.

 இவ்வாறு ஹார்மோன்கள் உணவுப் பொருள்களின் மூலம் உடலில் புகும்போது ஆண்மை மற்றும் பெண்மை பாதிக்கப்படும். சிறுமிகள் உரிய காலத்துக்கு முன்பே பருவமெய்தி விடும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

  பால்காரர்களை மட்டும் பழிப்பதில் அர்த்தமில்லை. எல்லாருமே பணம் சம்பாதிப்பதற்குப் பேயாக அலைகிறார்கள். ஆயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்ந்த பின்னரும் அடுத்த ஆயிரம் கோடி ரூபாயைச் சேர்க்க ஆலாய்ப் பறந்து எந்தவிதமான ஊழலிலும் ஈடுபடத் தயங்காதவர்களிருக்கிற நம்நாட்டில் சாதாரண வியாபாரிக்கு அந்த நாட்டம் இல்லாமலா போகும்?

 சில ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூரிலிருக்கும் ஒரு பிரபலமான நகைக் கடையில் ஒரு சவரன் தங்க நாணயத்தை வாங்கினேன். சில மாதங்கள் கழித்து நகை செய்வதற்காக அதை உருக்கியபோது அதிலிருந்து ஒரு வட்டமான செப்புத் தகடு பிரிந்து வந்தது. நகைக் கடை முதலாளியிடம் கேட்டபோது, ""நான் என்ன செய்ய முடியும்? நானே சவரன் காசை இன்னொருவரிடம் வாங்கித்தானே விற்கிறேன்'' என்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

 இவ்வாறாக எல்லாப் பொருள்களின் விஷயத்திலுமே உற்பத்தியாளரிடமிருந்து புறப்பட்டுப் பல கைகள் மாறி நுகர்வோரைச் சென்றடையும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் கலப்படம் கூடிக் கொண்டே போகிறது.

 அரிசியில் கல், மிளகாய்ப் பொடியில் செங்கல் தூள், மிளகில் பப்பாளி விதை, தேயிலையில் உளுந்துத் தோலி, மஞ்சள் பொடியில் நிறமேற்றப்பட்ட சுண்ணாம்புத் தூள், சர்க்கரையில் ரவை என்று ஜோடி சேர்ப்பதில் "முதுநிலை முனைவர்' பட்டம் பெறும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

 அரிசியைப் போலவே, பருப்பைப் போலவே, உளுந்து பயிறைப் போலவே தோற்றமளிக்கும் கல் குருணைகளை உருவாக்கும் யந்திரங்களை வடிவமைத்து, அவற்றுக்கு அரசின் அனுமதியையும் பெற்று "தொழில்' செய்கிறார்கள்!

 இவ்வாறான கலப்படப் பொருள்களைச் சற்று பொறுக்கினால் பிரித்தெடுத்துவிட முடியும். ஆனால் பூச்சிக் கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்கள் மூலமாகத் தானியங்களுக்குள் பரவிவிடும் வேதிகளை எப்படி நீக்க முடியும்?

  காய்-கனிகளுக்குக் கவர்ச்சி தரும் நிறங்களை ஏற்றவும், காய்கள் பழுக்காமலும் கனிகள் அழுகாமலும் தடுக்கவும் பயன்படும் வேதிகள், மரபியல் மாற்றம் செய்ய உதவும் வேதிகள் எனப் பல வேதிகளை நாம் உட்கொள்கிறோம். அதுமட்டுமின்றி உணவுப் பாக்கெட்டுகளில் அச்சிடப் பயன்படுத்தப்படும் சாய வேதிகளும் உணவில் கலந்து விடுகின்றன.

÷ஊறுகாய்களின் நிறத்தை மேம்படுத்தவும், டப்பியில் அடைக்கப்பட்டு வரும் காய்கறிகளின் பசுமை மாறாமல் தடுக்கவும் செப்பு வேதிகள் கலக்கப்படுகின்றன. தர்பூசணி, பட்டாணி, குட மிளகாய், கத்தரிக்காய் போன்றவை ஊசி மூலம் ஏற்றப்படும் வேதிகளால் மெருகேற்றப்படுகின்றன. ஆப்பிள் பழங்களுக்கு மெருகேற்றக் "காரீய ஆர்சனேட்' தெளிக்கப்படுகிறது.

 மஞ்சள் பொடி மற்றும் மசாலாத் தூள்களில் "காரீய குரோமேட்' கலக்கப்படுகிறது. இவ் வேதிகள் ரத்த சோகை, குறைப் பிரசவம், முடக்குவாதம் போன்ற கோளாறுகளை உண்டாக்க வல்லவை.

 இந்தியாவின் விவசாயிகள், ஐரோப்பிய விவசாயிகளைவிட 750 மடங்கு அதிகமான வேதி உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்துகிறார்கள். இதனாலேயே மேலை நாடுகள் இந்தியாவிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கின்றன.

 இந்தியத் தாய்மார்கள் தரும் தாய்ப் பாலில் குளோரின் மற்றும் பாஸ்பேட் பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள் தென்படுவதை ஓர் ஆய்வு கண்டுபிடித்துள்ளது. முலைப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் முலைப் பாலில் மற்ற பெண்களின் முலைப் பாலில் உள்ளதைவிட அதிக அளவில் பூச்சிக் கொல்லிகளின் எச்சங்கள் காணப்படுவதும் கண்டறியப்பட்டது.

 பல ஆண்டுகளுக்கு முன் ஒரு ஜெர்மானிய மருந்தாய்வு நிறுவனம் கத்தரிச் செடியின் வேர்களின் மருத்துவ குணங்களைச் சோதிக்க விரும்பி இந்தியாவிலிருந்து அவற்றை இறக்குமதி செய்தது. வழக்கப்படியே இந்திய ஏற்றுமதியாளர் கத்தரிச் செடி வேர்களுடன் கையிலகப்பட்ட காட்டுச் செடி வேர்களையும் கலப்படம் செய்து அனுப்பினார்.

      ஜெர்மானிய நிறுவனம் அவர் அனுப்பிய கலப்பட வேர்களில் புற்றுநோயைத் தடுக்கும் வேதிகள் இருப்பதைக் கண்டு, கத்தரிச் செடி வேர் வேண்டாம், கலப்பட வேர்களை மட்டும் நிறையத் திரட்டி அனுப்பும்படி கோரியது.

 இவ்வாறுதான் ரயில் பாதைகளில் கேட்பாரற்று மண்டிக் கிடந்த "நித்திய கல்யாணிச் செடி'யின் மகத்துவம் கண்டுபிடிக்கப்பட்டது.

  எனக்குத் தெரிந்தவரை கலப்படத்தால் ஏற்பட்ட ஒரே ஒரு நன்மை இதுதான்!

No comments:

Post a Comment