our inspiration

Friday, September 18, 2020

காய்க்கும் தென்னை மரத்திற்கு தேவையான ரசாயன உரங்கள்

தென்னைக்கு தேவைப்படும் ரசாயன உர அளவு பட்டியல்



கீழ்காணும் பட்டியலில் சூப்பர் பாஸ்பேட்டிற்கு பதிலாக DAP பயன்படுத்தினால்

 5 வயதிருக்கும் மேற்பட்ட மரங்களுக்கு   வருடத்திற்கு

DAP                     700 கிராம் 

UREA.                  1 கிலோ

POTTASH.           2 கிலோ


 வயது (வருடங்கள்)

தொழு உரம் (கிலோ/மரம்)

யூரியா
(கிலோ/மரம்)

சூப்பர் பாஸ்பேட்
 (கிலோ/மரம்)

மூரேட் ஆப் பொட்டாஷ்
(கிலோ/மரம்)

1

10

0.308 (140 g N)

0.500 (80 g P2O5)

0.480 (300 g K2O)

2

20

0.616 (280 g N)

1.000 (160 g P2O5)

0.960 (600 g K2O)

3

30

0.924 (420 g N)

1.500 (240 g P2O5)

1.440 (900 g K2O)

4

40

1.23 (560 g N)

2.000 (320 g P2O5)

1.920 (1200 g K2O)

5 வருடம் முதல்

50

1.23 (560 g N)

2.000 (320 g P2O5)

1.920 (1200 g K2O)

வாழை ரசாயன உர நிர்வாகம்

வாழைக்கு ரசாயன உரம் / வருடம் 

தழை சத்து.         110 gm
மணி சத்து.           35gm
சாம்பல் சத்து.     300gm

மேற்காணும் அளவு ஊட்டங்களை கீழ் காணும் வகை உரங்களாக கீழ்காணும் கால அளவுகளில் பிரித்து இட வேண்டும்

முதல் முறை வாழை நடும்பொழுது

அடியுரம்

யூரியா              50 கி
டி ஏ பி                50 கி
பொட்டாஷ்    100 கி

2 ஆம் மாதம்

யூரியா            50 கி
டி ஏ பி.              50 கி
பொட்டாஷ்.  100 கி

4 ஆம் மாதம்

யூரியா.         50 கி
பொட்டாஷ் 100 கி

6 ஆம் மாதம்

யூரியா           50 கி
பொட்டாஷ் 100 கி

தாய் மர குலை வெட்டிய பிறகு

முதல் மாதம்

டி ஏ பி               50 கி
ராக் பாஸ்      100 கி
பொட்டாஷ்   100 கி

3 ஆம் மாதம்

யூரியா.          50 கி
பொட்டாஷ் 100 கி

6 ஆம் மாதம்

யூரியா             50 கி
பொட்டாஷ்   100 கி

அடுத்தடுத்த கால்களுக்கு இதே அளவுகளை பின்பற்ற வேண்டும்.  இவற்றுடன் வாழையடி வாழை என்றால்  6 மாதங்களுக்கு ஒரு முறை வாழை ஒன்றிற்கு 100 கி ஜிப்சமும், 2 கூடை தொழு உரமும் இட வேண்டும்.

Sunday, November 8, 2015

அறிமுகம்



உலகில் வாழும் அனைத்துஉயிர்களும்,சிற்றுயிர்களான பூச்சிகள் முதல் 6 அறிவு கொண்ட மனிதன்வரை, அமைதியான துன்பமற்ற இனிமையான வாழ்க்கையையே விரும்புகின்றன,ஆனால் கிடைப்பதென்னவோ இன்பமும் துன்பமும் கலந்த கலவை. வாழ்க்கையில் துன்பத்தின் அளவு அதிகமானால் அது பெரும் துரதிர்ஷ்டமாகும்,இதற்குக் காரணம் என்ன? துன்பத்திலிருந்து முழுமையாகவிடுபடும் வழி என்ன? இல்லாவிட்டால் அதைக்குறைக்கவாவது முடியுமா? இவ்வாறு முயலுவது எல்லா உயிர்க்கும் பொதுவானகுணம்ஆனால் பகுத்தறியும் இயல்புள்ள மனிதனுக்கு அது தவிர்க்கமுடியாத கடமையாகும். ஆகவே இதை விரிவாக ஆராயலாம்.

முதலில் துன்பம் எங்கு ஏற்படுகிறது எனப்பார்க்கலாம்

1) உடலில் ஏற்பட்டு உணரப்படும் துன்பம்
2) உள்ளத்தில் ஏற்பட்டு உணரப்படும் துன்பம் ஆகியனவாகும் துன்பம் ஏற்படக்காரணங்களாவன

1) அறியாமை, 2)வினைப்பயன்


அறியாமை,

இதில் அறியாமை என்பது இன்பத்தை துன்பம் எனவும், துன்பத்தை இன்பம் எனவும், எண்ணுவதாகும், இவ்வறியாமை உடல்துன்பத்துக்கு ஓரளவு காரணமெனினும் கோபம், பேராசை, பொறாமை,வன்மம் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தி உள்ளத்தையேஅதிகமாகப்பாதிக்கக்கூடியது. மனதைச் செம்மைப்படுத்துவதன் மூலம் இத்துன்பத்தை விலக்கலாம்.

வினைப்பயன்

நாம் செய்த,செய்துகொண்டுள்ள,செய்யப்போகும் காரியங்களால் ஏற்பட்டு நம்மைவந்தடையும் வறுமை,உடல்நலக்குறைபாடு போன்ற விளைவுகளாகும் இவை 2ம் மிகுதியாக உடலையே பாதிக்கின்றன, இதிலிருந்து விடுபடும் வழியைப் பார்ப்போம் ,அவை

1) சரியாண உணவுப்பழக்கம்
2) தேவையானஅளவு உழைப்பு மற்றும் ஓய்வு
3) முறையான உடற்பயிற்சி
4) ஒழுக்கத்துடன் உடலைப்பேணி தீய செயல்களை விலக்கல்

இவற்றில் உணவைத்தவிர மற்ற 3-ம் பெருமளவு நமது கட்டுப்பாட்டில் உள்ளவை ஆகும் அவற்றை நாம் எளிதில் முறைப்படுத்திக்கொள்ளலாம் ஆனால் உணவைப்பொருத்த அளவில் நாம் பிறறையே சார்ந்திருக்கவேண்டி உள்ளது.அதில் ஏற்படும் சிறியமாறுபாடே உடலைப் பிணியின்றிப் பாதுகாக்கும், நமது உன்னதமுயற்சிகளைக் கெடுக்கப் போதுமானது.

உணவுப்பொருட்களில் அடிப்படை உணவுப்பொருட்கள், மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் என இருவகைகளிலும் கலந்துவிடும் நஞ்சே நோய்களுக்கும் அதன் மூலம் ஏற்படும் துன்பத்துக்கும் காரணம்.

பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் அது உருவாக்கப்படும் முறையினாலேயே நோய்களை விரைவாக ஏற்படுத்தும் தன்மை பெறுகின்றன ஆகவே அவை கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டியவையகும்.

அடிப்படை உணவுப்பொருட்களான குடிநீர், காய்கறி, அரிசி, பருப்பு, பழங்கள், எண்ணெய் வகைகள் போன்றவை சிறிதளவு தயாரிப்பு முறைகளாளும், அதிகஅளவில் ஆலைக் கழிவுகள்,இரசாயன உரம் மற்றும் மருந்துகள் மூலம் செய்யப்படும் விவசாய முறைகளாளும் நஞ்சாகின்றன,

சர்கரைநோய், இதயநோய்,பக்கவாதம்,புற்றுநோய்,உடல் உள்ளுருப்புகள் கெட்டுப்போதல்,ரத்தஅழுத்தம்,அதீத உடல்பருமன்,எலும்பு மற்றும் மூட்டுத்தேய்மானம் மற்றும் குழந்தைப்பேரில்லாமை,உடற்குறைபாடுள்ள குழந்தைகள் பிறத்தல் ஆகிய மோசமான விளைவுகளுக்கு மேற்க்கண்ட உணவில்எஞ்சும் நஞ்சே காரணமாகும்.

எனவே நாமும் நமது பாசத்துக்குரிய சந்ததிகளும் நோயற்ற,துன்பமில்லா நல்வாழ்வு வாழ நஞ்சில்லா வேளாண்மை முறைகளைக் கடைப்பிடிப்பதும் நஞ்சில்லா உணவையே பயன்படுத்துவதும் அவசியமாகும்.

நமது முன்னோர்கள் நமக்கு வளமான மண்ணையும்,எண்ணற்ற பயிர் வகைகளையும்,சுத்தமான சுவையான நீரையும், தூயகாற்றையும் ஆரோக்கியமான அமைதியான நல் வாழ்க்கைமுறையையும் விட்டுச்சென்றனர்,
நாம்நமதுசந்ததிகளுக்குவிட்டுச்செல்வது,அசுத்தக்காற்று,உரம்,பூச்சிமருந்தால் மாசுபட்ட நீர்,ரசாயனப்பால்,விஷமேறிய அரிசி,பருப்பு,நஞ்சில் ஊரிய காய்கறிகள்,மற்றும் பழங்கள்,புதுப்புது நோய்கள்,அதிநவீன மருத்துவமனைகள், மருத்துவச்செலவுக்கு இன்ஸ்யூரன்ஸ் மற்றும் நிறையப்பணம் .

போனது போகட்டும் உலகில் எதற்கும் ஒரு விலை உண்டு, ஒன்றைக்கொடுத்து மற்றொன்றை வாங்கலாம்,நாம் எதைக் கொடுத்து எதை வாங்கப் போகிறோம்? எதை விடுத்து எதைப் பெறப்போகிறோம்?

சிந்திப்போம்,சேர்ந்திருப்போம்,செயல்படுவோம்,சிதைந்த வளங்களைச்சீரமைப்போம். வாருங்கள் , வாழ்க்கை ஒரு வைபவமாகட்டும்

இயற்கை வேளாண்மை

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் ;அதனால்
உழந்தும் உழவே தலை

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம் என்பார்க்கும் நிலை




மனிதகுலம் மாபெரும் அறிவியல் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அதன் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் விவசாயம் மூலமாகவே நிறைவு செய்யப்படுகிறது.உணவில்லையேல் வாழ்க்கை இல்லை, நல் உடை இல்லையேல் நாகரிகமில்லை, உணவும் உடையும் தந்து, உயிரையும் உடல் அழகையும் வளர்ப்பது யார்?  அவன்தான் விவசாயி என்பவன்.
.
நாளை நம்வண்டி விரைந்தோட எரிபொருள் விளைவிப்பவனும் அவனே.ஆகவே விவசாயமே அடிப்படைத்தொழில்.பெரும் மரத்தை தாங்கும் வேர் போல, நாடு வளம்பெறவும் நல் அரசு நிலைபெறவும் நாட்டுக்கு தூன் போன்றவன் விவசாயி. அவன் வளர்ந்தால் நாடும் வளரும் அவன் நசிந்தால் நாடு வேரற்ற மரமாகும்

ஒரு நாடு பாதுகாப்பாகவும்,சமுதாயக்குழப்பங்கள் ஏதும் இல்லாமலும் இருக்கவேண்டும் என்றால், அந்நாடு பெருமளவு தற்சார்புடயதாக இருக்கவேண்டும், அதுவும் விவசாயத்தில் தற்சார்பு பெற்றிருப்பது என்பது மிகமிக அவசியமானதாகும்,

விவசாயத்தில் தற்சார்பு என்பது, விவசாயியின் தற்சார்பைப்பொருத்து உள்ளது,. நிலம்,விதை,உரம்,தொழில்நுட்பம், மூலப்பொருட்கள், பண்ணைக்கருவிகள் மற்றும் அவற்றிற்காண ஆற்றல் மூலம், ஆகியன அவர்களிடமோ அல்லது அவர்கள் சார்ந்த குழுவிடமோ இருப்பின் அவர்கள் தற்சார்புடைய விவசாயிகளாவர் அத்தகைய தற்சார்பு, இயற்கைவேளாண்மை முறைகள் மூலமே சாத்தியம்,

நாடும்,மக்களும்,உழவரும் நன்மையடய,நம் எண்ணங்கள் வெறும் எண்ணங்களாகமட்டும் இருந்தால்போதது செயல் வடிவமும் பெறவேண்டும்,அச்செயல் வடிவமே ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இயற்கைஉழவர் கூட்டமைப்பு ஆகும், கூட்டமைப்பின் அமைப்புமுறை, நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகளை இப்பகுதியில் நீங்கள் காணலாம்

ஜெய் குருதேவ்

வாழ்த்துக்களுடன்,
குருவின் நல்லடியார்கள்
(SSRNFA)

இயற்கை வேளாண்முறையில் களைக்கட்டுப்பாடு

Abutilon indicum

பொதுவாக களைகள் என்பது நமது சாகுபடிப் பயிர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு வளர்வதாகும். சூரியவெப்பம், தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் என்று சம அளவில் எடுத்துக் கொண்டு வளர்வதால் பயிர்களின் விளைச்சலில் தொய்வும், காலதாமதமும் ஏற்படுகிறது

 வேளாண் பொருள் உற்பத்தியின் மொத்த வருட இழப்பில், களைகளால் 45 சதவீதமும், பூச்சிகளால் 30 சதவீதமும், நோயினால் 20 சதவீதமும், மற்ற பூச்சிகளால் 5 சதவீதமும் இழப்பு ஏற்படுகிறது.

களைகளை முழுமையாக அழிப்பதற்க்குச் சாத்தியக் கூறுகள் இல்லை என்ற போதிலும் அதைக் கட்டுப்படுத்துவது சாத்தியம்.

இனி களைகளைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பார்ப்போம்

இரசாயன களைக்கொல்லியும், பூச்சிக் கொல்லியும் நமது சுற்றுச்சூழலை பாதிப்பதோடு, குடிநீர் மற்றும் நிலத்தடி நீரையும் நஞ்சாக்குகிறது. ஆகவே நமது சந்ததிகள் உயிர் வாழவும், வளங்களை பாதுகாக்கவும் நஞ்சில்லா முறைகளை நாம் கையாள வேண்டும்.


மாட்டுச் சிறுநீரைக் களைக் கொல்லியாகப் பயன்படுத்தல்

இந்த முறையானது பயிர்கள் மீது படாமல் மற்றும் தண்ணீர் (மாட்டுச் சிறுநீரில் )ஏதும் கலக்காமலும் தொடர்ச்சியாக மூன்று முறைகள் களைகள் மீது நன்கு நனையும் படி தெளித்தல் வேண்டும். தன்மூலம் களைகள் மக்கி மண்ணிற்குச் சிறந்த உரமாகவும் மண்ணின் வளம் மேம்படும் என்பது கூடுதல் சிறப்பு. மாட்டுச் சிறுநீருடன் தேவைக்கேற்ப எலுமிச்சம் பழம் டேங்கிற்கு ( 1/2 முதல் 1 பழம் வரையும்) பயன்படுத்திப் பலன் பெறலாம்.

 நிலத்தில் ஈரம் இல்லாதபொழுது மாட்டுச் சிறுநீரைப் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் பாய்த்த பின்போ அல்லது மழைக் காலத்திலோ  பயன்படுத்துதல் கூடாது. ஏனெனில், மாட்டுச் சிறுநீரில் தழைச்சத்து மிகுந்து காணப்படுகிறது. அவ்வாறு, ஈரம் இருக்கும் பொழுது பயன்படுத்தினால் களைகள் நன்கு செழிப்புடன் வளர்ந்துவிடும்.

உப்பு 

சமயலில் பயன்படுத்தப்படும் உப்பையும் நாம் களைக் கொல்லியாகப் பயன்படுத்தி பயனடைய முடியும். ஒரு பங்கு உப்பிற்கு எட்டு பங்கு தண்ணீர் கலந்து களைகளின் மேல் தெளிக்கலாம் ( வலுவான கலவைக்கு – ஒரு பங்கு உப்பிற்கு மூன்று பங்கு தண்ணீர் சேர்க்கலாம்) இதனுடன் ஒட்டும் திரவமாக காதி சோப் கரைசலைப் பயன்படுத்த வேண்டும்.

 உப்புக் கரைசல் என்பது மண்ணிற்கு ஆபத்தானது. இது களைகளின் மீது மட்டுமே படுவது போன்று தெளிக்க வேண்டும். அதிகமாகப் பயன்படுத்தினால் மண்ணின் கார அமில நிலை மாற வாய்ப்புள்ளது.

Friday, May 30, 2014

கார் டயரில் உள்ள எண்கள் குறியீடுகள் விவரம்

பொதுவாக நண்பர்களுடனும் உறவினர்களுடனும் கார்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருப்பது ஜாலியான ஒன்றாக பலருக்கு உள்ளது.அப்பொழுது  அடிக்கடி அனைவர் மனதிலும் டயர்களில் உள்ள அளவு குறியீடுகளைப் பற்றியும் தனது வண்டிக்கு எந்தமாதிரியான டயர் சிறப்பாக இருக்கும் என்பதுபற்றியும் சந்தேகங்கள்  எழுந்தவண்ணம்  இருந்தது.

டயர்களின் size பற்றிய சந்தேகமும் பெரிதாக இருந்தது. இதில் ஒரு பிரச்சினை டயர் டீலரிடமிருந்தோ  மெக்கானிக்கிடமிருந்தோ சரியான பதில் கிடைப்பதில்லை என்பது. அவர்கள் சாதாரண விவசாயிகளுக்கெல்லாம் இவற்றைச் சொல்லவேண்டியதில்லை என எண்ணுகிறார்கள் போலும்.

எனக்கும் இந்தவிவரங்கள் சரியாகத் தெரியவில்லை ,ஆகவே இணையத்தில் தேடியபோது சில விவரங்கள் கிடைத்தன அவற்றை உங்களுடன் பகிர்கிறேன்.




மேற்காணும் படத்திலிருந்து  முதலில் 

P 215/65R  15 89H 

எனும் குறியீட்டைப்பார்க்கலாம் இதில் 
  • P - என்பது மக்கள் பயணம்செய்யும் வண்டிக்கு என்பதைக்குறிக்கும் 
  • 215 - டயரின் அகலம் மிமீ ல் 
  • 65 - என்பது  டயரின் உயரம் அகலத்தின் விகிதத்தில்,அதாவது 215 மிமீ ல் 65 சதம் அதாவது  139.75 மிமீ 
  • R - ரேடியல்டையர் என்பதைக்குறிக்கும் 
  • 15 - ரிம்மினுடைய அளவு 
  • 89 -  ஏற்றக்கூடிய அதிகபச்ச எடையைக்குறிப்பது(எடைக்குறியீட்டு எண் )
  • H  - டயர் தாங்கக்கூடிய  அதிகபச்ச வேகத்தைக்குறிப்பது (வேகக்குறியீடு ) 
 கீழ்காணும் பட்டியல், எடைக்குறியீட்டு எண்ணின் அடிப்படையில் ஒரு டயர் தாங்கும் எடை குறிப்பிடப்பட்டுள்ளது

 


 கீழ்காணும் பட்டியல், வேகக்குறிறியீட்டின் அடிப்படையில் ஒரு டயர் தாங்கும் வேகம்  குறிப்பிடப்பட்டுள்ளது 




Thursday, October 10, 2013

கட்டுப்படுத்த முடியாமல் வெளியேறும் சிறுநீர்



மழையும் மப்பும் மந்தாரமுமாக இருக்கும் நாட்களில் வயிற்றிலும் மப்பும் மந்தாரமும் சூழ்ந்து நிற்கும். வயிற்றிலுள்ள கதகதப்பினால் சிறுநீரகங்களின் உற்பத்திக் கேந்திரங்கள் கட்டுப்பாட்டுடன் இயங்குகின்றன. இந்தக் கதகதப்பு மந்தப்படுவதால், சிறுநீரின் உற்பத்தியானது சிறுநீரகங்களில் அதிகரித்து அடிக்கடி வெளியேறுகிறது. அதனால் வயிற்றிலுள்ள மப்பும் மந்தாரமும் மாறி அதன் சுறுசுறுப்புக்கும் சூடான நிலையைப் பெறுவதற்கும் தக்க உதவி தேவை. தீபாவளி லேகியத்தை இந்தக் காலகட்டங்களில் நம் முன்னோர் தயாரித்து தினம் காலையில் சாப்பிட்டு வயிற்றின் மந்த நிலையைப் போக்கி சிறுநீரின் அதிக அளவிலான போக்கைக் கட்டுப்படுத்தினர். நீங்களும் தீபாவளி லேகியத்தை எளிதாக வீட்டிலேயே தயாரித்துச் சாப்பிடலாம். இதற்குத் தேவையானவை:

திப்பிலி 50 கிராம், ஓமம் 50 கிராம், கண்டந்திப்பிலி 50 கிராம், ஏலக்காய் 5 கிராம், ஜாதிக்காய் 5 கிராம், சுக்கு 25 கிராம், மிளகு 25 கிராம்,சீரகம் 25 கிராம், கொத்துமல்லி 25 கிராம்.

ஜாதிக்காய், ஏலக்காய் நீங்கலாக மற்றவற்றை வறுத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் நன்கு இடித்துச் சூரணமாக்கிக் கொள்ளவும். வெல்லம் 300 கிராம் அளவு தண்ணீரில் கரைத்துப் பாகாக்கி  அதில் 50 கிராம் நெய் விட்டு இந்தச் சூரணத்தைப் போட்டுக் கிளறி வைத்துக் கொள்ளவும். சுமார் 1 -2 டீ ஸ்பூன் அளவு காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும்.

மார்கழியும் தையும் ஹேமந்த ருதுவெனப்படும். இவ்விரு மாதங்களில் பனி அதிகமாக உணரப்படும். பொதுவாகவே இக்காலத்தில் இரவு நேரம் அதிகம். பகல் நேரம் குறைவு. பகலிலும் பனி வாடை காலை 8-9 மணி வரையிலும் இருக்கும். மாலை 5 மணியிலிருந்தே பனி வாடை ஏற்பட்டுவிடும். ஆகவே அதிலிருந்து உடலைக் காப்பாற்றும் கம்பளி முதலிய உடைகளின் கதகதப்பு, தோலின் வறட்சி ஆகியவற்றின் காரணமாக ஜீரண கோசங்களுக்குத் தேவையான சூடு சற்று அதிகமாகவே இருக்கும். உணவைச் செரிக்க வைக்க வேண்டிய செயல் சிறுநீரகங்களுக்கு இல்லாததாலும், சூடு வயிற்றுப் பகுதியில் குவிந்திருப்பதாலும், சிறுநீரகங்கள் வெளியிலுள்ள பனி வாடையால் குளிர்ந்திருக்கும்.  இந்தக் குளிர்ச்சியின் தாக்கத்தினால், நீர்ச்சுரப்பு அப்பகுதியில் கூடுகிறது. இதுவே சிறுநீர்ப் பெருக்கு ஏற்படுவதற்குக் காரணமாகிறது.  இந்தக் காலத்தையொட்டி ஜீரண உறுப்புகளின் நிலைக்கேற்ப அமைந்த உத்தம உணவு பொங்கல். அதன் செரிமானத்தில் , உடல் உட்புற சூட்டைத் தளர்த்தி, எல்லாப் பகுதிகளுக்கும் சீராகப் பரப்புவதால், சிறுநீரகங்களுக்குத் தேவையான சூடு கிடைப்பதால், அதன் செயல்பாடு சீராகி, நீர்ச்சுரப்பைக் கட்டுப்படுத்தும், விடியற்காலையிலேயே எழுந்து வெந்நீரில் குளித்து காய்ந்த உடை உடுத்தி வெளிக் குளிரைப் போக்கிக் கொள்வதன் மூலமாகவும், சிறுநீர் அதிக அளவில் போவதைத் தடுத்துக் கொள்ளலாம். ஐந்து உரைப்புள்ள பொருட்களாகிய திப்பிலி, கண்டந் திப்பிலி, செவ்வியம், கொடி வேலி வேர்ப்பட்டை, சுக்கு எனும் பஞ்சகோலம் சேரும் இந்த காந்தம் கஷாயத்தைக் காலை, மாலை குடித்து வருவது மிகவும் நல்லது. 15 மி.லி. கஷாயத்தை 60 மி.லி. வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து காலை, மாலை
உணவுக்கு 1 மணி நேரம் முன்பாகச் சாப்பிடவும்.

எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,  நசரத்பேட்டை

Sunday, June 30, 2013

கார், வீடு, கண்ணாடி துடைக்கும் ரசாயனம்


பொதுவாக மழைக்காலங்களில் கார்கண்ணாடிகளை சுத்தமாகப்பராமரிப்பது மிகவும் அவசியமான ஒன்று, அதற்க்கு  உறுதுணையாக இருப்பவை கண்ணாடியை சுத்தப்படுத்தும் ரசாயனங்கள், இவை வண்டியின் முன்புறமுள்ள சிறு கேனில் நிரப்பப்பட்டு மோட்டார்மூலம்  தேவையானபோது  கண்ணாடிமீது செலுத்தப்பட்டு சுத்தப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. பாதுகாப்பான  பயனத்துக்கு இவை மிகவும் முக்கியமானவை ஆகும்.

இக்கலவைகள்  கடைகளில் பல பெயர்களில் பலவிதமான விலைகளில் கிடைக்கின்றன, பொதுவாக வண்டியை சர்வீஸ் செய்யும்போது  அங்கு இத்திரவத்தை  நிரப்பிவிடுவார்கள்  ஆனால் மழை காலங்களில்  அடிக்கடி இதை நாம் பயன்படுத்தநேரும்போது  இது விரைவில் தீர்ந்துவிடும் எனவே சுத்தப்படுத்தும் திரவத்தை வெளியில் வாங்கவேண்டிய தேவை எழுகிறது. வண்டிகளுக்கான சரக்குகள் விற்கும் கடையில் கடையில்  காருக்கு என்று கேட்டால் ரூ 300 அளவில் 1/2 லிட்டர் கேனாகக் கிடைக்கும்,  விலையைக்கேட்டு  அதிர்ச்சியடைபவர்கள்  குழாய்தண்ணீரையோ அல்லது அதனுடன் சிறிது திரவசோப்பு  கலந்தோ வண்டியில் ஊற்றிப் பயன்படுத்துவர்,

இவ்வாறு குழாய்த்தண்ணீரையும்  சோப்பையும் கலந்து பயன்படுத்தும்போது  தண்ணீரில் உள்ள தாதுப்புகள்  காரில் உள்ள  இத்திரவம் வரும் நுண்குழாய்களில் படிந்து இதன் செயல்பாட்டைப்பாதிக்கும்,  சோப்பு  சரியான அளவில் பயன்படுத்தப்படவில்லை எனில் அவை படலம்போல் படிந்து  காட்சித்தெளிவைப் பாதிக்கும்.

இதிலிருந்து தப்பிக்க நாம் கடைகளில் விற்கும் வீட்டுக்கண்ணாடிகளை சுத்தப்படுத்தும் திரவங்களை வாங்கி அவற்றை அப்படியே நிரப்பிப் பயன்படுத்தலாம் காருக்கான கலவைகளின்  விலையோடு ஒப்பிடுகையில்  ஓரளவு இவை பரவாயில்லை,  ஆனால் வீட்டில் இவற்றை நாம் பயன்படுத்துவதற்கும் காரில் பயன்படுத்துவதற்கும் இடையில் உள்ள வேறுபாடு காரணமாக இவையும் பொருளாதார ரீதியில் சிறப்பானவை அல்ல

சரி வேறு என்னதான் வழி?

அதுதான் நமக்கு கைவந்த கலை ஆயிற்றே! வேறென்ன?  நாமே செய்துவிடவேண்டியதுதான்!

செய்முறை

தேவையான பொருட்கள்
  1. காய்ச்சி வடித்த நீர் ( Distilled water Not acid water) 2 லி
  2. 30 மிலி வினிகர் ( இயற்கை முறையிலும் கிடைக்கிறது)
  3. 5 மிலி டிஷ் வாஷ் 
  4. 100 மிலி ரப்பிங் ஆல்கஹால் (Surgical spirit- iso propyl alcohol) 
  5. 4 லி கொள்ளளவுகொண்ட கேன்
முதலில் கேனில் 100 மிலி ரப்பிங் ஆல்கஹாலை எடுத்துக்கொள்ளவும் பின் அத்துடன் 2 லி காய்ச்சிவடித்த நீரை கலக்கவும், பின்பு மற்றவற்றை ஒவொன்றாகக் கலக்கவும், நன்கு கலக்கிய கலவையை வண்டியிலுள்ள  Reservoir Cane ல் சேர்க்கவும். இப்பொழுது கன்ணாடியைக் கழுவ Homemade Windshield Washer Fluid,தயார்

Saturday, January 19, 2013

மாடே இல்லாமல் பால் உற்பத்தி!



By கே.என். ராமசந்திரன்
First Published : 19 January 2013 01:34 AM IST



தன்னால் முடியாத ஒரு காரியத்தைச் செய்துதரச் சொல்லி நச்சரிக்கிறவனைப் பார்த்து, ""காளை மாடு, காளை மாடு என்கிறேன், உழக்குப்பால், உழக்குப்பால் என்று கழுத்தறுக்கிறாயே'' என்று சீறுவார்கள். ஆனால், மாடே இல்லாமல் பாலை உற்பத்தி செய்கிற வித்தை சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் கைவந்த கலையாகிவிட்டது.



2008-ஆம் ஆண்டில் சீனா மேலைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பால் மற்றும் குழந்தை உணவான பால் பொருள்களில் வேதிப்பொருள்கள் அதிக அளவில் கலந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு அது, ""மாபெரும் பால் ஊழல்'' என்று பிரபலமானது.

 ஏராளமான குழந்தைகள் உள்பட பலர் நோய்வாய்ப்பட்டதால் மேலை நாடுகள் சீனத்திலிருந்து பால் பொருள்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்தன.

 சீனா ஏற்றுமதிசெய்த பால் மற்றும் பால் உணவுகளில் "மேலமைன்' என்ற தொழிலியல் வேதி கலக்கப்பட்டிருந்தது. தீப்பிடிக்காத கூரை மற்றும் தடுப்புகளைத் தயாரிக்க உதவும் "மேலமைன் பார்மால்டிஹைடு' என்ற பிளாஸ்டிக் ரோசனத்தை உற்பத்தி செய்யத் தேவையான கச்சாப்பொருள் "மேலமைன்'. அதைப் பாலுடன் கலந்துவிட்டால் கூடுதலான புரதச்சத்து இருப்பதைப்போல முதல் கட்டச் சோதனைகளில் காட்டும். ஆனால், "மேலமைன்', சிறுநீரகத்திலும் சிறுநீர் உறுப்புகளிலும் சேதமேற்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டதும் அதை உணவுப் பொருள்களில் சேர்ப்பது உலகளாவிய அளவில் தடை செய்யப்பட்டுவிட்டது.

 சீனாவின் பால் ஊழல், 2008 ஜூலையில் வெளிச்சத்துக்கு வந்தது. அடுத்த நவம்பருக்குள் மூன்று லட்சம் பேர் "மேலமைன்' ஏற்படுத்திய கோளாறுகளால் பாதிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டது. சிறுநீரகத்தில் கல் உருவாவது முதலான பல்வேறு சிறுநீரகக் கோளாறுகள் காரணமாகக் குறைந்தது ஆறு குழந்தைகள் மரணமடைந்ததாகவும் தெரியவந்தது.

எப்படியாவது ஏற்றுமதியைப் பெருக்க வேண்டும் என்ற வெறியுடனிருக்கிற சீனத் தொழில்துறை தாம் பயன்படுத்துகிற வேதிப்பொருள்கள் உடலுக்கு ஊறு விளைவிக்கக்கூடும் என்பன போன்ற "அல்ப விஷயங்களுக்காக' அலட்டிக் கொள்வதில்லை!

நம் நாட்டுப் பால் உற்பத்தியாளர்களில் சிலர் உரத்தைப் போட்டு, தீவனம் வளர்த்து,  அதைப் பசு மாட்டுக்கு ஊட்டி அதன் பிறகு பாலைக் கறந்து விற்பது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்ற விஷயம் என்று எண்ணியோ என்னவோ - நேரடியாக - யூரியா, உரம், காஸ்டிக் சோடா, சமையல் எண்ணெய், சலவை சோப்புத்தூள், தண்ணீர் ஆகியவற்றுடன் கொஞ்சம் பாலையும் கலந்து செயற்கைப் பாலை நேரடியாகவே தயாரித்து விட்டார்கள். அது பார்ப்பதற்கு இயற்கையான பாலைப் போலவே நிறமும், செறிவும், கொழுப்பு உள்ளடக்கமும் கொண்டிருக்கும்.

   "பால்செறிவு மானி'யும் எளிதில் ஏமாந்துவிடும். உணவு ஆய்வகங்களில் முதல் நிலைச் சோதனைகளிலும்கூட அந்தச் "செயற்கைப் பால்' தேறிவிடும். ஆனால், அதைத் தொடர்ந்து பயன்படுத்துகிறவர்களுக்குப் பார்வைப்புலனும் செவிப்புலனும் பாதிக்கப்படுவதுடன் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புண்டு.

  சிறிதுகூட மனிதாபிமானமோ, பசு அபிமானமோ இல்லாமல் காசு மட்டுமே குறி  என்றிருக்கிற சில பால் உற்பத்தியாளர்களுக்கு "ஆக்சிடோசின்' என்ற வேதி கை கொடுக்கிறது. இயற்கையான ஆக்சிடோசின், விலங்குகளின் பிட்யூட்டரிச் சுரப்பியின் பின்பகுதியில் உற்பத்தியாகிச் சேமித்து வைக்கப்படுகிற ஒரு ஹார்மோன். அது பெண்களின் பிரசவத்திற்குப் பிறகு கருப்பையைச் சுருங்க வைப்பதற்கும் மார்பகத்திலிருந்து பாலை வெளிப்படச் செய்வதற்கும் உதவுகிறது. அந்த ஹார்மோன் செயற்கையாகவும் தயாரிக்கப்பட்டு விற்பனையாகிறது.

 பிரசவத்துக்குப் பின் கருப்பையில் சிக்கல் ஏற்பட்டால் அவசர கால சிகிச்சைக்கு மருத்துவர்கள் அதைப் பயன்படுத்துவார்கள். அதைக் கவனக் குறைவாகப் பயன்படுத்தினால் கருப்பை சேதப்பட்டுக் கிழிந்து கூடப் போகலாம்.

கால்நடைகளுக்குப் பயன்படுத்தப்படும் செயற்கை ஆக்சிடோசின் மிகவும் மலிவாக, ஒரு குமிழ் ஐம்பது பைசா விலையில் கிடைக்கிறது. பால் கறப்பதற்குச் சற்று முன் அதைப் பால் மடியில் ஊசி மூலம் செலுத்திவிட்டால் கூடுதலாகப் பால் கிடைக்கும் என்ற தவறான எண்ணம் பால்காரர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. ஆனால் உண்மையில் அது பால் காம்பிலுள்ள சுருக்குத் தசைகளைத் தளர்த்திவிட்டுப் பால் வேகமாக வெளிப்பட மட்டுமே செய்கிறது. அத்துடன் அது பசுவின் இனப்பெருக்க உறுப்புகளைச் சேதப்படுத்தவும் கூடும். பொன்  முட்டையிடும் வாத்தை அறுத்தவன் கதை மாதிரி, நிறையப் பால் கிடைப்பதைப் போலத் தோன்றினாலும் இரண்டு மூன்று ஆண்டுகளில் பசு பால் தருவது குறைந்து மலடாகவும் ஆகிவிடும். அதன் பிறகு அதைக் "கோ-சாலை'க்கோ (பசுப் பாதுகாப்பு இல்லம்), கசாப்புக் கடைக்கோ அனுப்ப வேண்டியதுதான்.

 "ஆக்சிடோசின்' செலுத்திக் கிடைத்த பாலைப் பருகும் மனிதர்களுக்கும் குறிப்பாகச் சிறு குழந்தைகளுக்கும் பலவிதமான உடலியல் கோளாறுகள் வரும். கருத்தரித்திருக்கும் தாய்மார்கள் அந்தப் பாலைப் பருகினால் பிரசவத்தின்போது கடுமையான உதிரப் போக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். அதில் தப்பிப் பிழைத்தாலும் குழந்தைக்குப் பாலூட்டுவதில் சிக்கல் ஏற்படலாம். பார்வைத் திறனும் கேட்கும் திறனும் பாதிக்கப்படுவதாயும் கண்டறியப்பட்டிருக்கிறது.

 மாடுகளுக்கு மட்டுமின்றிக் காய்கனி உற்பத்தியிலும் ஆக்சிடோசின் பயன்படுத்தப்படுகிறது. பறங்கி, பூசணி, சுரை போன்ற காய்களில் ஆக்சிடோசினை ஊசி மூலம் செலுத்தினால் அவற்றின் பருமன் ஓரிரு நாள்களிலேயே இருமடங்காக அதிகரித்து விடுகிறது.

 இவ்வாறு ஹார்மோன்கள் உணவுப் பொருள்களின் மூலம் உடலில் புகும்போது ஆண்மை மற்றும் பெண்மை பாதிக்கப்படும். சிறுமிகள் உரிய காலத்துக்கு முன்பே பருவமெய்தி விடும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

  பால்காரர்களை மட்டும் பழிப்பதில் அர்த்தமில்லை. எல்லாருமே பணம் சம்பாதிப்பதற்குப் பேயாக அலைகிறார்கள். ஆயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்ந்த பின்னரும் அடுத்த ஆயிரம் கோடி ரூபாயைச் சேர்க்க ஆலாய்ப் பறந்து எந்தவிதமான ஊழலிலும் ஈடுபடத் தயங்காதவர்களிருக்கிற நம்நாட்டில் சாதாரண வியாபாரிக்கு அந்த நாட்டம் இல்லாமலா போகும்?

 சில ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூரிலிருக்கும் ஒரு பிரபலமான நகைக் கடையில் ஒரு சவரன் தங்க நாணயத்தை வாங்கினேன். சில மாதங்கள் கழித்து நகை செய்வதற்காக அதை உருக்கியபோது அதிலிருந்து ஒரு வட்டமான செப்புத் தகடு பிரிந்து வந்தது. நகைக் கடை முதலாளியிடம் கேட்டபோது, ""நான் என்ன செய்ய முடியும்? நானே சவரன் காசை இன்னொருவரிடம் வாங்கித்தானே விற்கிறேன்'' என்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

 இவ்வாறாக எல்லாப் பொருள்களின் விஷயத்திலுமே உற்பத்தியாளரிடமிருந்து புறப்பட்டுப் பல கைகள் மாறி நுகர்வோரைச் சென்றடையும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் கலப்படம் கூடிக் கொண்டே போகிறது.

 அரிசியில் கல், மிளகாய்ப் பொடியில் செங்கல் தூள், மிளகில் பப்பாளி விதை, தேயிலையில் உளுந்துத் தோலி, மஞ்சள் பொடியில் நிறமேற்றப்பட்ட சுண்ணாம்புத் தூள், சர்க்கரையில் ரவை என்று ஜோடி சேர்ப்பதில் "முதுநிலை முனைவர்' பட்டம் பெறும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

 அரிசியைப் போலவே, பருப்பைப் போலவே, உளுந்து பயிறைப் போலவே தோற்றமளிக்கும் கல் குருணைகளை உருவாக்கும் யந்திரங்களை வடிவமைத்து, அவற்றுக்கு அரசின் அனுமதியையும் பெற்று "தொழில்' செய்கிறார்கள்!

 இவ்வாறான கலப்படப் பொருள்களைச் சற்று பொறுக்கினால் பிரித்தெடுத்துவிட முடியும். ஆனால் பூச்சிக் கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்கள் மூலமாகத் தானியங்களுக்குள் பரவிவிடும் வேதிகளை எப்படி நீக்க முடியும்?

  காய்-கனிகளுக்குக் கவர்ச்சி தரும் நிறங்களை ஏற்றவும், காய்கள் பழுக்காமலும் கனிகள் அழுகாமலும் தடுக்கவும் பயன்படும் வேதிகள், மரபியல் மாற்றம் செய்ய உதவும் வேதிகள் எனப் பல வேதிகளை நாம் உட்கொள்கிறோம். அதுமட்டுமின்றி உணவுப் பாக்கெட்டுகளில் அச்சிடப் பயன்படுத்தப்படும் சாய வேதிகளும் உணவில் கலந்து விடுகின்றன.

÷ஊறுகாய்களின் நிறத்தை மேம்படுத்தவும், டப்பியில் அடைக்கப்பட்டு வரும் காய்கறிகளின் பசுமை மாறாமல் தடுக்கவும் செப்பு வேதிகள் கலக்கப்படுகின்றன. தர்பூசணி, பட்டாணி, குட மிளகாய், கத்தரிக்காய் போன்றவை ஊசி மூலம் ஏற்றப்படும் வேதிகளால் மெருகேற்றப்படுகின்றன. ஆப்பிள் பழங்களுக்கு மெருகேற்றக் "காரீய ஆர்சனேட்' தெளிக்கப்படுகிறது.

 மஞ்சள் பொடி மற்றும் மசாலாத் தூள்களில் "காரீய குரோமேட்' கலக்கப்படுகிறது. இவ் வேதிகள் ரத்த சோகை, குறைப் பிரசவம், முடக்குவாதம் போன்ற கோளாறுகளை உண்டாக்க வல்லவை.

 இந்தியாவின் விவசாயிகள், ஐரோப்பிய விவசாயிகளைவிட 750 மடங்கு அதிகமான வேதி உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்துகிறார்கள். இதனாலேயே மேலை நாடுகள் இந்தியாவிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கின்றன.

 இந்தியத் தாய்மார்கள் தரும் தாய்ப் பாலில் குளோரின் மற்றும் பாஸ்பேட் பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள் தென்படுவதை ஓர் ஆய்வு கண்டுபிடித்துள்ளது. முலைப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் முலைப் பாலில் மற்ற பெண்களின் முலைப் பாலில் உள்ளதைவிட அதிக அளவில் பூச்சிக் கொல்லிகளின் எச்சங்கள் காணப்படுவதும் கண்டறியப்பட்டது.

 பல ஆண்டுகளுக்கு முன் ஒரு ஜெர்மானிய மருந்தாய்வு நிறுவனம் கத்தரிச் செடியின் வேர்களின் மருத்துவ குணங்களைச் சோதிக்க விரும்பி இந்தியாவிலிருந்து அவற்றை இறக்குமதி செய்தது. வழக்கப்படியே இந்திய ஏற்றுமதியாளர் கத்தரிச் செடி வேர்களுடன் கையிலகப்பட்ட காட்டுச் செடி வேர்களையும் கலப்படம் செய்து அனுப்பினார்.

      ஜெர்மானிய நிறுவனம் அவர் அனுப்பிய கலப்பட வேர்களில் புற்றுநோயைத் தடுக்கும் வேதிகள் இருப்பதைக் கண்டு, கத்தரிச் செடி வேர் வேண்டாம், கலப்பட வேர்களை மட்டும் நிறையத் திரட்டி அனுப்பும்படி கோரியது.

 இவ்வாறுதான் ரயில் பாதைகளில் கேட்பாரற்று மண்டிக் கிடந்த "நித்திய கல்யாணிச் செடி'யின் மகத்துவம் கண்டுபிடிக்கப்பட்டது.

  எனக்குத் தெரிந்தவரை கலப்படத்தால் ஏற்பட்ட ஒரே ஒரு நன்மை இதுதான்!

Monday, May 28, 2012

துரித உணவைத் தவிர்ப்போம்

ஆர்.எஸ். நாராயணன்
First Published : 28 May 2012 02:21:38 AM IST Dinamani



உணவே மருந்து; மருந்தே உணவு' என்று வாழ்ந்து வந்த தமிழர்களுக்கு நாகரிகத்தின் காரணமாக, பாரம்பரியம் இழந்து அவர்கள் உண்ணும் உணவே விஷமாகிவிட்டது.


இயற்கை விவசாயமும் மெல்ல மெல்ல உயர்ந்தும் வருகிறது. அவ்வாறு இயற்கை விவசாய உணவை வாங்க இயலாதவர்கள், கடையில் வாங்கும் ரசாயனத்தில் விளைந்த காய்கறிகள் - பழங்கள் - தானியங்களை 8 மணி நேரம் சுத்தமான நீரில் ஊற வைத்து அத்தண்ணீரை வடித்துவிடலாம். சற்று விஷம் குறைய வாய்ப்புண்டு.


அதற்காக சமைக்கும் உணவே வேண்டாம் என்று முடிவு செய்யக்கூடாது. விதம் விதமான துரித உணவுகள் அங்காடிகளில் குவிந்தவண்ணம் உள்ளன. குழந்தைகள் வாங்குவதற்காக பாலிவுட், கோலிவுட் நடிகர் நடிகைகளும், கிரிக்கெட் வீரர்களும் அவற்றை உண்பதாக காட்டுவார்கள். இவற்றை "ஜங்க் ஃபுட்' என்பார்கள். அதாவது கெட்ட உணவு.

இந்திய ஊட்ட உணவு நிபுணர்கள் கெட்ட உணவு என்பதை ஏற்க மாட்டார்கள். "தவறான டயட்' அதாவது ""சமநிலை இழந்த ஊட்ட உணவின் கூட்டல்'' என்பார்கள். கெட்ட உணவு விளம்பரத்தில் ஊட்ட உணவு நிபுணர்களும் பங்கேற்பது உண்டு.


சமையல் இல்லாமல் அதாவது சமையலறைக்குச் செல்லாமல் பல மாதங்களுக்கு முன்பே சமைக்கப்பட்டதும் கெடாமல் இருக்க ரசாயனங்களும் சேர்க்கப்பட்ட பாக்கெட் உணவுதான் துரித உணவு. இவற்றிலும் பூச்சி மருந்து விஷம் இருக்க வாய்ப்புண்டு. பூச்சி மருந்து விஷத்திற்கு மேல் வேறு ஆபத்துகளும் உண்டு.


என்னென்ன துரித உணவுகள் நமக்குக் கிடைக்கின்றன? அவற்றில் உள்ள ஊட்டங்களின் அளவு என்ன? உணவைக் கெடாமல் பாதுகாக்கச் சேர்க்கப்படும் ரசாயனங்களில் நன்மை உண்டா? எப்படி சமச்சீரான உணவு பாதிக்கப்படுகிறது? என்று சிந்திக்கத் தெரிந்தவர்கள் சிந்தித்து துரித உணவிலிருந்து விடுதலை பெறுவது நன்மை பயக்கும்.


துரித உணவில் அதிகமான கலோரி உண்டு. ஊட்டம் இல்லாததால் நோய் ஏற்படும். முக்கியமாகக் கூடுதல் கொழுப்பு உடலில் சேர்ந்து குண்டுக்குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. உடலில் தேவைக்குமேல் சதை ஏறுவதால் சர்க்கரை நோய், உயர்ந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மனித ஆயுள் குறைகிறது.



100 வயது வாழ வேண்டிய மனிதன் 50, 60 வயதுகளில் இறக்க நேரிடும். ஆகவே மேலைநாடுகளில் துரித உணவு விளம்பரங்களுக்குத் தடை உண்டு. சில நாடுகளில் துரித உணவுக்குக் கொழுப்பு வரி போடுகிறார்கள். விளம்பரங்களால் தூண்டப்படும் குழந்தைகள் அளவுக்கு மீறி தனியார் நிறுவன உருளை வறுவல்களைத் தின்று பருமன் நோய் வருவதைக் கண்கூடாகப் பார்க்கலாம். குறைந்த எடை குழந்தைகளைவிடக் கூடுதல் எடை குழந்தைகளின் ஆரோக்கிய நிலை ஆபத்தில் முடியலாம்.


உணவில் இரண்டு வகையான கொழுப்புகள் உண்டு. ஒன்று சாதாரணக் கொழுப்பு. நெய், சமையல் எண்ணெய்களில் உண்டு.


மற்றொன்று டிரான்ஸ்ஃபேட் என்று கூறப்படும் கெட்டகொழுப்பு. இது அடர் கொழுப்பும் அல்ல. டிரான்ஸ் கொழுப்பு, கரையாத கொழுப்பு என்றும் கூறலாம். நெய், எண்ணெய்களை அடர் கொழுப்பு என்பர். கரையாத டிரான்ஸ் கொழுப்பு அடர் கொழுப்பைவிட நான்கு மடங்கு கெடுதல். கரையாத கொழுப்பு வனஸ்பதியில் அதிகம்.


எல்லா சமையல் எண்ணெய்களையும் ஹைட்ரஜனேஷன் செய்து வனஸ்பதி அல்லது டால்டா செய்யப்படுகிறது. எல்லா வகையான துரித உணவுகளிலும், கேக்குகளிலும் வனஸ்பதி பயனாகிறது. அமெரிக்க ஐரோப்பிய டால்டாவில் 2 சதவிகித டிரான்ஸ் கொழுப்பு அனுமதிக்கப்படுகிறது.


ஐரோப்பிய நாடுகளில் தேங்காய் எண்ணெய் டால்டாவுக்குப் பயனாவதால் டிரான்ஸ் கொழுப்பு குறைவு. தேங்காய் எண்ணெயில் அடர் கொழுப்பு உண்டு. ஆனால், கரையாத கொழுப்பு இல்லை. இந்தியாவில் தயாரிக்கப்படும் டால்டாக்களில் 12 முதல் 24 சதவிகிதம் கரையாத டிரான்ஸ் கொழுப்பு உள்ளது.


சில டால்டா நிறுவனங்களின் தயாரிப்புகளில் டிரான்ஸ் கொழுப்பு அனுமதிக்கப்பட்ட அளவுக்குமேல் மத்திய அரசால் அனுமதிக்கப்படுவது அடிப்படைத் தவறு. டிரான்ஸ் கொழுப்பு 2 கிராம், அடர் கொழுப்பு 20 கிராம் அளவுக்குமேல் மனிதன் உண்ணும்போது ரத்தக்குழாய் தடிக்கும். ரத்த அழுத்தம் உயரும். இதயம் மட்டுமல்ல, சிறுநீரகம் பழுதுறலாம். நீரிழிவு வரும். ஊளைச்சதையுள்ள குண்டுக்குழந்தை, குண்டுப் பெண்மணி நோயுடன் வாழ்ந்து குறைந்த ஆயுளில் இறந்துவிடுவார்கள்.


ஒரு மனிதன் நலமுடன் வாழ சராசரியாக 2,200 கலோரி உணவு போதும். இந்தக் கலோரி 300 கிராம் கார்போஹைட்ரேட், 6 கிராம் உப்பு, 20 கிராம் கொழுப்பு, 2 கிராம் டிரான்ஸ் கொழுப்பு ஆகியவற்றில் கிடைத்துவிடும். 300 கிராம் மாவுச்சத்து (கார்போ ஹைட்ரேட்) என்பதில் சர்க்கரையும் அடங்கும். தானியங்கள், பருப்பு வகைகளில் புரதச்சத்து உண்டு. வைட்டமின் சத்துக்காக உண்ணும் காய்கறி - பழங்களில் தேவையான நார்ச்சத்தும் கிட்டும்.



நாம் உண்ணும் பல உணவுகளில் மாவுச்சத்துடன் புரதச்சத்தும் உண்டு. ஆனால், துரித உணவுகளில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் எதுவுமே இல்லை என்பதுடன், அனுமதிக்கப்படும் அளவுக்குமேல் உப்பும், கரையாத கொழுப்பும் உள்ளதால் மனித ஆயுள் குறைகிறது. ஆயுள் குறைவது மட்டுமல்ல, தினமும் மாத்திரைகள், ஊசிகள் என்று மனித உடல் மருந்துக்கு அடிமையாவதையும் கவனிக்கலாம்.


அதிகபட்சமாக அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் துரித உணவுகளிலும் குறைந்தபட்சமாக அவரவர் சமைக்கும் உணவுகளிலும் கெடாமல் இருக்கவும் நிறத்திற்காகவும் சேர்க்கப்படும் ரசாயனப் பொருள்களினாலும் நோய்கள் ஏற்படும். சாதாரணமாக சமைத்த உணவு 6, 7 மணி நேரத்திற்கு மேல் தாங்காது. பூஞ்சைக்காளான் பிடிக்கும். புளிக்கப் புளிக்கக் கெட்ட வாடை வரும். மோர், சாத்தூத்தம் (பழைய சோற்றில் நீர் ஊற்றி வைக்கப்படும் புளித்த நீராகாரம்) நீங்கலாக மற்ற உணவு கெட்டுவிடும். நீர் ஊற்றி வைக்கும் போது தண்ணீரில் உள்ள ஆக்சிஜன் காரணமாக ஈஸ்ட், லேக்டோ பாசிலஸ் போன்ற நுண்ணுயிரிகள் பெருகி உயிர் வாழ்வதால் மோர், நீராகாரம் உடலுக்கு நல்லது. மற்றவை அப்படி அல்ல. முற்காலத்தில் சர்க்கரைப்பாகு, தேன், உப்பு, கிராம்பு, எலுமிச்சை போன்றவை உணவு கெடாமல் இருக்கப் பயனாயிற்று. இப்போது ஃபிரிட்ஜ். மின்சாரம் நின்றுவிட்டால்? ஃபிரிட்ஜ் உணவும் பாதுகாப்பானது இல்லை.


மனிதர்கள் உண்ணும் ஜாம், ஜெல்லி, சீஸ், ஊறுகாய் போன்ற துரித உணவுகளில் பென்சோட் என்ற நச்சு சேர்க்கப்படுகிறது. பென்சீன் என்ற ரசாயனம் நிலக்கரி வாயுவிலிருந்து உருவாகும் எரிபொருள். பூச்சி மருந்துகளிலும் பென்சோட் உண்டு. அடைக்கப்பட்டு விற்கப்படும் இறைச்சிகளில் நைட்ரேட் சேர்க்கப்படுகிறது. ரொட்டி, பன், கேக் போன்றவற்றில் சோடியம் பென்சோட் சேர்க்கப்படுகிறது. வெள்ளை நிறம் பெற சல்ஃபைட் சேர்க்கப்படுகிறது. சிவப்பு / மஞ்சள் / பிங்க் நிறம் பெற அலுமினியம் குரோமைட் என்ற விஷப்பொருள் சேர்க்கப்படுகிறது. கேசரி பவுடர் என்ற பெயரில் குரோமைட் விற்கப்படுவதால் அதை அல்வாவிலும் கேசரியிலும் பயன்படுத்துவார்கள். விஷயமறியாத தாய்மார்கள் கேசரி பவுடரை வாங்கி சிவப்பு நிறத்துக்குப் பயன்படுத்துவது உண்டு.

தனியார் நிறுவன உருளைக்கிழங்கு வறுவல்களில் புட்டிலேட்டட் ஹைட்ராக்சினேட் சேர்க்கப்படுகிறது. வயிற்றில் கட்டி வரும். சோடியம் பைகார்பனேட் என்ற சமையல் சோடா சேர்க்கப்படாத பொருளே இல்லை. இதுவும் உப்பைப்போல் அளவுக்கு அதிகமானால் ரத்த அழுத்த நோய்க்கு வித்தாகும். சல்ஃபைட் விஷத்தால் ஒவ்வாமை, மூச்சுத்திணறல், சளி ஏற்படும்.


இது ஓர் அவசர உலகம். நல்லுணவை நல்ல விதமாகச் சமைக்கக்கூடிய பாட்டிமார்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பிவிட்டோம். ஜங்க் ஃபுட் - அதாவது கெட்ட உணவை விலைகொடுத்து வாங்கி நோயுறுகிறோம். மனிதர்களே நன்கு யோசியுங்கள். அந்தக் காலத்தில் நெல்லூர்த்த மாவு, சத்து மாவு என்று பாட்டிமார்கள் திடீர் உணவு செய்வார்களே.


அவல் உள்ளது, பழங்கள் உள்ளன, இட்லி, தோசை, உப்புமா, கிச்சடி, தயிர் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், சப்பாத்தி என்று எதுவும் வீட்டில் செய்து நீங்களே கொண்டு வரவேண்டும். துரித உணவைவிட சமையலறை உணவுதான் நல்லது.

Sunday, May 20, 2012

ஆயுர்வேத மருத்துவத்தில் பஞ்சகவ்யத்தின் பலாபலன்கள்


பசுவின் பால், தயிர், நெய், பசுவின் சாணம், கோமூத்ரம் எனப்படும் பசுவின் சிறுநீர் ஆகியவை சேர்ந்தது பஞ்சகவ்யம் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். இந்த ஐந்து திரவங்களும் எந்த விகிதத்தில் கலக்கப்பட வேண்டும்? ஆயுர்வேத மருத்துவத்தில் பஞ்சகவ்யத்தின் பலாபலன்கள் விளக்கப்பட்டுள்ளனவா? தினந்தோறும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் பஞ்சகவ்யம் உட்கொண்டால் பெறும் நன்மைகள் எவை?



 "பஞ்ச' என்றால் ஐந்து. "கவ்யம்' என்றால் பசு மாட்டிலிருந்து கிடைக்கக் கூடிய பால், தயிர், நெய், சாணம் மற்றும் சிறுநீர் ஆகியவற்றின் கலவை. அஷ்டாங்க ஹிருதயம் எனும் ஆயுர்வேத நூலில் இந்த பஞ்சகவ்யம் பற்றிய விபரம் உத்தர ஸ்தானத்தில் வலிப்பு நோயைக் குணப்படுத்தும் பகுதியில் கூறப்பட்டுள்ளது. இந்த ஐந்தையும் நெய்யுடன் சேர்த்து பக்குவம் செய்து சாப்பிட்டோமேயானால் வலிப்பு, ஜுரம், பைத்தியம், காமாலை போன்ற உபாதைகள் நீங்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. நெய் மருந்தாகக் கிடைக்கிறது.

 ஒவ்வொன்றையும் சம அளவு சேர்க்க வேண்டும் என்று சரக ஸம்ஹிதையில் கூறப்படுகிறது. ஆனால் பசுநீர் 1 பங்கு, பசும்சாணம் 1 1/2 பங்கு, பால் 8 மடங்கு, நெய் 4 பங்கு, தயிர் 5 பங்கு என்ற விகிதத்தில் சேர்ப்பது சம்பிரதாயமாகும் (ஸித்த யோகம்).
 மகாபஞ்சகவ்யகிருதம் என்ற பெயரிலும் ஒரு நெய் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. தசமூலம், திரிபலை, மஞ்சள், மரமஞ்சள், வெட்பாலைப்பட்டை, ஏழிலம்பாலை, நாயுருவி, அவுரி, கடுகரோஹிணீ, கொன்றை, புஷ்கரமூலம், பேயத்தி வேர், காஞ்சொறி இவற்றை வகைக்கு 2 பலம் எடுத்து 16 பிரஸ்த நீரிலிட்டுக் காய்ச்சி நாலில் ஒன்றாகுமாறு குறுக்கி அதில் சிறுதேக்கு, வட்டத் திருப்பி, துவரை, சிவதை, நாகதந்தீ, த்ரிகடுகு, வாசனைப் புல், பெருங்குரும்பை, ஓமம், நிலவேம்பு, யானைத் திப்பிலி, நன்னாரி, பெருநன்னாரி, மல்லிகை (காட்டாத்தி என இந்து முனிவர். காட்டு மல்லிகை எனச் சிலரும், மருதோன்றி எனச் சிலரும் கூறுவர்), கொடிவேலி, நொச்சி ஆகியவற்றை வகைக்கு 1/4 பலம் எடுத்து கல்கமாக்கி கலப்பதுடன் முன் கூறப்பட்ட பஞ்சகவ்ய திரவப் பொருட்கள் நான்கையும் சேர்த்து ஒரு பிரஸ்தம் நெய் பக்குவம் செய்து கொள்ள வேண்டும். இது மகாபஞ்ச கவ்யம் எனப்படும். இது விசேஷமாக ஜுரம், வலிப்பு, மருகாதரம், பவுத்திரம், வீக்கம், மூலம், காமாலை, பாண்டு, குன்மம், இருமல், கிரஹபீடை ஆகிவவற்றைப் போக்கும்.

 வலிப்பு நோய் உள்ளவருக்கு இந்த நெய் மருந்தை அப்படியே கொடுத்துவிட முடியாது. வாயுவால் உண்டான வலிப்பை, பஸ்தி எனும் எனிமா முறையாலும், பித்தத்தால் உண்டான வலிப்பை, பேதி மருந்தாலும், கபத்தால் உண்டான வலிப்பை, வாந்தி சிகிச்சையாலும் குடல் சுத்தி முறைகளைச் செய்த பிறகு, கஞ்சி முதலியவற்றால் உடலைத் தேற்றி, அதன் பிறகே வலிப்பு நோயை அடக்குவதற்கும், நீக்குவதற்கும் பஞ்சகவ்யகிருதம் எனும் நெய் மருந்தைச் சாப்பிட வேண்டும்.

 மற்ற மருத்துவமுறைகளால் கண்டறியப்படாத மனோவஹஸ்தரோதஸ், அதாவது மனதின் திட்டங்களையும் செயல்களையும் ஏந்திச் செல்லும் குழாய்களைப் பற்றிய விபரங்களை ஆயுர்வேதம் எடுத்துக் கூறுகிறது. தினமும் ஓரிரு ஸ்பூன் பஞ்சகவ்ய நெய் மருந்தைக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், புத்தியும் மனமும் கலக்கமடையாமல் தெளிவான சிந்தனையும், சிந்தனைக்கேற்ற செயல்பாடுகளும் ஏற்படும். கவலை, வருத்தம், பயம், காமம், குரோதம் முதலியவற்றால் மனம் கலக்கப்பட்ட நிலையில், கோபமடைந்த மனம், உடல் ஆகியவற்றின் ரஜோகுண, தமோகுண வாயு தோஷங்களால் இருதயம் நிரம்பப் பெற்று, ஸத்வ குணம் குலைந்து, உணர்வை எடுத்துச் செல்லும் குழாய்களிலும் தோஷங்கள் பரவிய நிலையில் தமோ குணத்தை அடைந்தவராகி அறிவுகுன்றி அருவருக்கத்தக்க சேஷ்டைகளைப் புரிபவர்களுக்கு, இந்த பஞ்சகவ்ய மஹாபஞ்சகவ்ய நெய் மருந்தானது ஒரு வரப் பிரசாதமாக அமையும். அந்த அளவிற்கு மனதில் அமைதியைத் தோற்றுவிக்கும்.
 குடல், இதயப் பகுதி, உட்புறக் குழாய்கள், மூச்சுப்பாதை போன்ற முக்கியமான பகுதிகளில் சேரக் கூடிய கிருமித் தொற்று, அடைப்பு, சுருக்கம், தளர்ந்தநிலை, செயல்திறன் குன்றுதல் போன்ற உபாதைகளை பஞ்சகவ்யக்கிருதத்தின் தொடர்ச்சியான உட்புற வரவால் நீங்கிவிடக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் மனதைச் சார்ந்த உபாதைகள் பெருகி வருகின்றன. அவற்றுக்கு பஞ்சகவ்ய - மஹா பஞ்சகவ்ய நெய் மருந்துகள் ஒரு சிறப்பான தீர்வைத் தரும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

நன்றி: தினமணி